190
புதைமண்
அதற்கேற்ற இடைவெளி கொடுத்து ஓட்ட வேண்டும். லாரிகள் மொய்க்கும் தேசியச் சாலையில் இரவில் கார் ஓட்டுவது என்பதே ஒரு தனிக்கலை. இதில் மோகனன் தேர்ந்தவன் என்றாலும், இப்போது அவன் கார் இரு தடவை விபத்துக்குள்ளாகப் போனது. இவன் வழிவிடவில்லை என்று ஒரு லாரி இவன் காரை ‘அணைப்பது’போல் ஓடியது. எதிரே நான் வருகிறேன் என்பதுபோல் பிரகாசமாக வெளிச்சம் போட்டும். வேக வேகமாய் ஓடிய இவன் காரை மோதப் போவதுபோல் பாவலா செய்து கொண்டே ஒரு லாரி பின்நோக்கி போனது. இவனே காரை நிறுத்தலாமா என்று நினைத்தபோது, பின்னிருக்கையில் படுத்துக் கிடந்த செல்வா மயக்கம் தெளிந்ததுபோல் கத்தினான். அலறியடித்து எழுந்து மோகனனின் சட்டைக் காலரின் பின் பக்கத்தை பிடித்திழுத்தபடியே, “சதிகாரப் பயலே... என்னை... அந்த மிருகக் கூட்டத்துல மாட்ட வச்சிட்டு... எங்கேடா போனே...” என்று கத்தினான்.
கார் நின்றது. முன் கதவு திறந்தது. பின் கதவு திறக்கப்பட்டது. மோகனன், செல்வாவை வெளியே இழுத்துப் போட்டான். கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். இடுப்பில் காலால் எகிறினான். கீழே விழுந்த செல்வாவை தூக்கி நிறுத்தி, கழுத்தை, கையால் பிடித்தபடியே அந்த அந்தகார இருளில் பேய் போல் கத்தினான்.
“பொறுக்கிப் பயலே... முட்டாப் பயலே... நான் ஒன்னை ஒளிஞ்சுக்கோன்னு சொன்னால்... இப்படி பண்ணிட்டியே... உன்னையே நம்பி இருக்கிற என் சிஸ்டர் என்ன பாடுபடப்போகிறாளோ...”
“உன் சிஸ்டர் யாருக்குடா வேணும்? நீதாண்டா போக்கிரி புறம்போக்கு... கூட்டிக் கொடுத்த பயல்... பத்து நிமிஷத்துல சித்தப்பாவுக்கு டெலிபோன் செய்துட்டு வாறதா போக்குக் காட்டிட்டு, ரெண்டு மணி நேரமா என்னடா செய்தே...? தோ பாரு... இதுக்கு மேல கைய நீட்டுன... மவனே... ஒன் முதுகிலயும் நான் சவாரி செய்வேன்.”
மோகனன், புரிந்து கொண்டான். பயலுக்கு போதை மாத்திரையை கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான் லேசாக அவனுக்கு மயக்கம் தெளிந்திருக்கிறது. சொல்லிப் பார்ப்போம். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போறான்... மோகனன், தன்னிலை விளக்கமாக பேசினான்.
“நான் சொல்வதை கேளுடா நாயே... போன் செய்வதுக்காக, கேய் அலுவலகத்துக்குப் போனேன். அது அவுட் ஆப் ஆடர்.