உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

19

பணத்துல வாங்கிக்கன்னு அண்ணி சொல்லி இருக்காங்க... அதுக்கு முடியாதுன்னா... அது அடாவடிதானே?... ஊர்க்காரன், ஆள் பலத்தை தப்பா பயன்படுத்தும் போது... நீங்க ஒங்க பேட்ச் மேட் எஸ்.பி.கிட்ட இருக்கிற நட்பை சரியா பயன்படுத்துறதுலே என்ன தப்பு...?”

மனோகர், நிமிர்ந்து பார்த்தான்... ஈரம் கசிந்த தலைமுடியை பின்பக்கமாய்த் தட்டி விட்டபடியே, சங்கரி அவனைப் பார்த்தாள்... அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் ரசனை கண்டு நின்றாலும், போவது போல் பாவலா செய்த பக்கத்து வீட்டு உமாவை அழுந்தப் பிடித்தபடியே, கணவனுடைய பதிலுக்காகக் காத்து நிற்பவள் போல் முகம் தூக்கி நின்றாள்... மனோகர், எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்தான்... ஒரு மாதப் பிரிவிற்குப் பிறகான பரிவுப் பார்வை... அவள் உடலெங்கும் கண்களை ஊடுருவ விட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சங்கரி மீண்டும் அவனை உசுப்பினாள்.

“இதையாவது செய்யுங்க...”

மனோகரின் பிரிவுப் பார்வை, பரிதாபப் பார்வையானது... அவளை ஊடுருவிப் பார்த்தக் கண்கள் தன்னைத்தானே உள்முகமாய்த் தேடின... ‘இதையாவது செய்யுங்கன்னு எந்த அர்த்தத்தில் சொல்றாள்? யதார்த்தமா... இல்ல குத்தல... நோ... நோ... அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியலியே...’

அக்கா காந்தாமணி, நிலைமையைச் சமாளித்தாள்.

“சரி... சரி... நாளைக்கு ஆற அமரப் பேசலாம்...”

“பேசாம இங்கேயே வந்திடுக்கா...”

“அதையும் சேர்த்து நாளைப் பேசலாம்... எம்மா! சங்கரி... மொதல்ல தம்பி குளிக்கட்டும்... வெந்நீர்ல குளிச்சாத்தான் அலுப்பு தீரும். உடல்வலி போகும்... கீசரப் போடு...”

“கீசரு ரிப்பேரு அண்ணி...”

“நல்ல பொண்ணு... அப்போ அடுப்புல போடு... தண்ணி சூடாகணும்... அவ்வளவுதானே...?”

சங்கரி, கணவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே உள்ளே சமையலறைக்குள் போகப் போனாள்... பிறகு திரும்பி வந்து திண்ணையில் வைக்கப்பட்ட சூட்கேஸைத் தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றாள்... இன்னொரு லெதர் பேக்கைக் கண்களால் சுட்டிக் காட்டி, உமாவைத் தூக்கி விடும்படி அதே கண்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/20&oldid=1836783" இலிருந்து மீள்விக்கப்பட்டது