சு. சமுத்திரம்
225
வைத்துவிட்டு, தனது ஆபீஸ் முதலாளி பார்த்த திசையை பார்த்தார். ஒரு அழகான பெண். அநேகமாக எதிர்முனைக்காரரின் மகளாக இருக்கவேண்டும். அவளோடு, நாற்பது வயது மதிக்கத்தக்க பிள்ளைக்குட்டி தம்பதியினர்.
இன்ஸ்பெக்டர், தானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறியவர் போல் உடனடியாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்து, வரவேற்றார்.
“நீங்க மிஸ் கவிதாதானே?”
“ஆமாம் ஸார்.”
“என்ன மேடம்? நான் இன்னார் மகள்னு நீங்களே சொல்லியிருந்தால் இவனை எப்பவோ திருப்பி அனுப்பியிருப்பேன்.”
“நானும், நீங்க சொன்னது மாதிரி இன்னார் மகள்னு போன் செய்தேன். யாரோ ஒருத்தன் ‘வைடி போனைன்’னு சொன்னான்”
அப்படிச் சொன்னது யாராக இருக்கும் என்பதுபோல், கடுமையாய் பாவலா செய்தபடியே இன்ஸ்பெக்டர், காவலர்களைப் பார்க்க, அவர்கள் “நீதான்... நீயேதான்” என்பதுபோல் எதிர்பார்வை பார்த்தார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் சமாளித்தார். “இங்கே யாரும் அப்படி பேசுறவங்க கிடையாது மேடம். நீங்க கேட்டது டெலிபோன் கிராஸ் டாக்கா இருக்கும்.”
இதற்குள், இரும்பாய் உட்கார்ந்திருந்த செல்வா, மெழுகாய் குழைந்து எழுந்து, நின்றான். சித்தப்பாவின் காலில் அப்படியே விழுந்து, “உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் சித்தப்பா. என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா” என்று காலைக் கட்டி அழுதான். அவர், அவனை தூக்கி நிறுத்திவிட்டு, தனது கண்களை துடைத்தபோது, செல்வா, சித்திக்காரியின் தோளில் சாய்ந்து, “சித்தி! எங்கம்மா திட்டாத திட்ட, நீங்க திட்டல... எங்கம்மா போடாத அளவுக்கு எனக்கு சோறு போட்டீங்க... நான் உங்ககிட்ட நன்றியில்லாம நடந்துட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படியா பண்ணிட்டேனே” என்று விம்மினான். கவிதாவையும் நன்றியோடு பார்த்தான். அந்த பார்வையில் நளினம் இல்லை. ‘ஆனாலும், எல்லோரையும் மோசடி பண்ணிட்டேனே’ என்று, கவிதாவை பார்த்தபடியே, கண்களை கைகளால் மறைத்துக் கொண்டான். குழந்தைகளை இருபக்கமாக அணைத்துக் கொண்டான்.
கவிதா, மட்டும் சிறிது விலகிப்போய் துப்பாக்கி அப்பிய சுவர் பக்கம் முகம் போட்டு, அந்தச் சுவரில் கண்ணீர் கோடுகளை