பக்கம்:ஒத்தை வீடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

சு. சமுத்திரம்

 75 சங்கரி, அதிர்ந்து திரும்பினாள். கூட்டம் மட்டும் இல்லை யானால், அவனிடம் நியாயம் கேட்டிருப்பாள். ஆனாலும், அவன் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. அந்தக் கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க அவளை, அவமானம் பிடுங்கித் தின்றது. மாமியார்க்காரி வேறு, அண்ணியின் கன்னத்துக்கு அருகே கையைக் கொண்டு போய், பெண்ணாடி பார்த்தே. சீமையில் இல்லாத பொண்ணு. என்று கத்திக் கொண்டிருந்தாள். சங்கரி, சூனியப்பட்டு நின்றாள். பிறகு வாயில் முந்தானை முனையைச் சுருட்டிப் பந்தாய்த் திணித்தபடியே பின்னோக்கி ஓடினாள். படிநோக்கிப் பாய்ந்தாள். கட்டிலில் விழாமல், தரையில் வீழ்ந்தாள். வீட்டின் நினைப்பு கேளாமலே வந்தது. அப்பா, அவளைத் தாயாகப் பாவித்தார். அம்மாவோ, பேத்தி போல் செல்லம் கொடுத்தாள். என்ன கேட்டாலும் கிடைக்கும். எங்கே வேண்டுமானாலும் போகலாம். இவள்தான் கேட்டதில்லை. போனதில்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தத்தம் பெண்களை சங்கரி இருக்காபாரு, நீயும் இருக்கியே பாரு என்பார்கள். ஆனால், இவள் சமயம் பார்த்து அந்தப் பெண்களை வீட்டுக்குக் கூட்டி வந்து, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஆற்றுப்படுத்துவாள். அந்தப் பெண்களும், அவளிடம் பகைமை காட்டியதில்லை. கல்லூரியில், அவளைப் பார்த்து சில மாணவர்கள் கிண்டலடித்தது உண்மைதான். காரைக்கால் அம்மையாராம். அன்னை தெரேஸாவாம். இவளும் பதிலுக்கு அவர்களை நெருங்கி, அந்த அம்மையார்கள் போலவே ஆசீர்வாதித்து விட்டுச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, சிரிப்பாய்ச் சிரிக்கப்படவில்லை. அந்தக் கிண்டல், நையாண்டியாய் மாறியதில்லை. தோழிகள் கூட, எங்களை இந்தப் பாடு படுத்தறானுக. உன்னை ஏண்டி விட்டு வைத்திருக்காங்க... சொல்லுடா. என்று சுவைபடக் கேட்பார்கள். இவள் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, அவர்களையும் தொற்றிக் கொள்ளும். இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் இப்படிப்பட்டச் சுடு சொற்களைக் கேட்கிறாள். தெரு அவமானத்திற்கு உட்படுத்தப் படுகிறாள். பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவோமா. நீரிழிவு அப்பாவுக்கு கிட்னிதான் பெயிலாகும். அம்மா, அழுதே செத்துப் போவாள். இன்று வரை தன்னை வியக்கும் ஊர், வாழாவெட்டி என்று வம்புப் பேச்சு பேசலாம். கால வெளிப்பாட்டை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டியது தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/76&oldid=1412661" இலிருந்து மீள்விக்கப்பட்டது