பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௧௫

என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பன போன்ற சொற்களினிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற் களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்காலவியல்பு நோக்கி)க் குற்றியலுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ, து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றியலுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. 'உகரம்', 'குற்றுகரம்', 'குற்றியலுகரம்' என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்னவற்றில் குறு, 'குற்றியல்' என்னும் அடை மொழிகளால், குறுகிய உகரம்பொருளளவில் குறிக்கப்படுகின்றதேயன்றி ஒலியளவிலன்று. ஆகவே 'உச்சகாரம்' 'உப்பகாரம்' என்பவை முற்றியலுகரத்தைக் குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம்.

மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகரவீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன.

சுக்கு, குச்சு, பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றியலுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர்.

பு, து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற்பெயர்களும், து, சு என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த பிறவினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே,

“உயிர் ஒள எஞ்சிய இறுதி யாகும்”


என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு “உச்சகாரம்.... உரித்தே” என்றும், “உப்பகாரம்.... மொழிப...” என்றும் முற்றுகரத்தை விதந்தோதினார் தொல்காப்பியர்.

(2) தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது.

தொல்காப்பியப் புணரியலில்,

“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்” (2)

“குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (3)