பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬

ஒப்பியன் மொழிநூல்

ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும் போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர்.”

முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும்.

மக்கள் பெரும்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும், நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையராகவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும்.

12. ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய.

உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Onomatopoeic theory)யும், சிலர் உணர்ச்சியொலிக் கொள்கை (Interjectional theory)யும், சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory)யும் எடுத்துக்கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும்.

மொழி இயற்கையாய்த் தோன்றியதென்னும் இயற்கைக் கொள்கை(Natural theory)யும், இடுகுறிகளாய்த் தோன்றிற் றென்னும் இடுகுறிக்கொள்கை(Arbitrary theory)யும், பலர் கூடிஇன்னபொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு முடிவுக்கொள்கை(Conventional theory)யும், கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் கொள்கை(Divine theory)யும் இக்காலத்திற் கேலா.

13. இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது.

சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற்றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப் பெயர்களையிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா.