பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௨௭

“ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டுமென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ்விலக்கணத்தை அம் மொழி யிழந்துவிடுகிறது” என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.[1]

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

என்றார் தொல்காப்பியர்.[2]

14. உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும்.

திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமஸ்கிருதத்தை, இன்றும் சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன் மொழியாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத்திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாகமுடியும்?

உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளையுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலை களைக் கொண்டதாய், இடுகுறியில்லதாய், தனிமொழியாயி ருத்தல் வேண்டும்.

15. சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும்.

மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப்படுகின்றது.

16. மொழி மாந்தன் அமைப்பே.[3]

மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே. எப்பிக்கூரஸ் (Epicurus), அரிஸ்ற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தேயிருந்தது.


  1. 1.L.S.L. Vol.1.p.47.
  2. 2.தொல். 639
  3. 3.L.S.L. Vol.1.p.31