பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௪

ஒப்பியன் மொழிநூல்

'ஓதிம விளக்கின்' என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, “ஈண்டுக் காரன்ன மென்றுணர்க” என்றும், “வெள்ளையன்னங் காண்மின்” என்னும் சீவக சிந்தாமணித் தொடருக்குக் “காரன்னமுமுண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு”[1] என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத்திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று[2] தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம்.

உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயை பின்மைக்குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம்.

சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டிலும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ஙனமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டிநாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா,

(3) காட்எலியட்

காட் எலியட் என்பவர் எழுதியுள்ள 'மூழ்கிய லெமுரியா' (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப் படத்தினால், “ஒருபெருமலையானது மேலைக்கடலில் தொடங்கித் தென்வட லாகக் குமரிக்குத் தென்பாலுள்ள நிலப்பகுதியிலே நெடுஞ் சேய்மை சென்று, பின் தென்மேற்காகத் திரும்பி, 'மடகாஸ்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது” என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுகின்றார்.

(4) சாண் மர்ரே ஆராய்ச்சிப்படை :

(இந்தியப் பட விளக்க வாரகை - ஜூலை 29, 1934)

“இந்து மாக்கடலைத் துருவுவதற்கு 20,000 பவுன் வைத்து விட்டுப்போன, காலஞ்சென்ற வயவர் சாண் மர்ரே (Sir John Murray)யால் தோற்றுவிக்கப்பட்ட கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒருகாலத்தில், தென் அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவையொட்டியும் இந்தியாவையொட்டியும் தென்கண்டம் (Australia) வரை


  1. 1. சீவ.4:80.
  2. 2. All About Birds, p.141.