பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரி நாடு—புறச் சான்றுகள்

௫௫

படர்ந்திருந்ததும் காண்டுவானா (Gondwana)க் கண்டம் அல்லது காண்டுவானா நாடு என்று அறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, அண்மையில் வியக்கத்தக்க வுண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இதன் சான்று, பனி மலையும் (Himalayas), காக்கஸஸ் (Caucasus), ஆல்ப்ஸ் (Alps), பிரனீஸ் (Pyrenees) என்னும் மலைகளும் கடலுக்குள்ளிருந்த காலத்தில், நாலு கண்டங்களிலும் ஒரே வகையான நிலவுயிரிகளும் செடிகொடிகளும் கன்னிலையிற் காணப் படுகின்றன என்னும் உண்மையைச் சார்ந்ததாகும். மபாஹிஸ் (Mabahiss) என்னும் சிறிய எகிப்திய மரக்கலத்தில், பிழம்புத் தலைவர் செய்மூர் செவல் (Colonel Seymour Sewell, F.R.S.) என்பவரின்கீழ், கடந்த ஏழு மாத காலமாக நடைபெற்றுவந்த புதுக் கண்டுபிடிப்புகளை, வியன்புலவர் ஜே. ஸ்ற்றான்லி நாடினர் (Professor J. 'Stanley Gardiner') வர்ணிக்கிறார். வியன்புலவர் காடினெரைக் கண்டு பேசியபின், எவ்ப். ஜீ. பிரின்ஸ் ஒயிற்று (F.G. Prince White) 'நாளஞ்சல்' (“Daily Mail”) தாளிகையில், பின்வருமாறு வரைகிறார்:—

“காண்டுவானா நாடு நச்சுயிரிக்காலத்திற்குரியதாயும் (Reptilian Period)தாயும், ஐயமற, சினாம்புள்ள நச்சுயிரிப் பூதங்களின் இருப்பிடமாயுமிருந்தது. தென்மேற்காகச் சொக்கோத்ராவை (Socotra) நோக்கிச் செல்லும் 10,000 அடி உயரமுள்ள மலைத்தொடர், தெளிவாக, (இந்தியாவில் ஆஜ்மீரிலுள்ள) அரவல்லி மலைத்தொடரும் பிற மலைகளுமானவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதன் தென்கிழக்கில் ஓர் ஆழ்ந்த பள்ளத் தாக்கு இருக்கிறது. அது தொல்லூழிகளில், இந்தஸ் (Indus) ஆற்றுப் படையின் தொடர்ச்சியாயிருந்த தென்பது தேற்றம். இதிலிருந்து ஒருவர், அப்பெரிய நிலப்பரப்பின் முழுமையும் இந்தஸ் ஆற்றின் பகுதியும், ஒரு பெருவாரியான எரிமலை யெழுச்சியில், சொல்லப் போனால், தலைகீழாக அமிழ்ந்தன என்றுதான் அனுமானிக்க முடியும் என்று அவ் வியன்புலவர் சொல்லுகிறார்,” (இவ்வுருப்படிக்குரிய திணைப்படத்தை இப் புத்தக முகப்பிற் காண்க.)

(5) திருவாளர் சாண் இங்கிலாந்து

“.......... கோடி யாண்டுகளுக்கு முன் — ஒருவேளை அதற்கு மிக முந்தி — ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது. மாந்தன் அப்போது ஞாலத்தில் தோன்றியே யில்லை. அக்கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டாமாவும் லெமுர் என்னுங் குரங்கினமும் பூத ஆமையும் குடியிருந்தன.”

ஒ.மொ.—9