பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௬

ஒப்பியன் மொழிநூல்

“உலகம் ஓர் இன்பமான கானகமாயிருந்தது. எனினும், பறவைகள் பாடவில்லை; ஏனென்றால் அவை அப்போது இல்லை. இங்ஙனம் சில வகைகளில், இப்பெருங் கண்டம், ஒவ்வொன்றும் பெரும்போடாயிருந்த உயிரிகளுடன் அமைதியாகவும் இயற்கைக்கு மாறுபட்டு மிருந்தது.

“அது தோன்றி, அல்லது நிலையாகவே 20,000,000 ஆண்டுகள் போலிருந்தது. பின்பு மூழ்கத் தொடங்கிற்று....”[1] என்று சாண் இங்கிலாந்து கூறுகிறார்.

இங்ஙனம் மறுக்கமுடியாத பல சான்றுகளிருக்கவும், வட மொழிக்கு மாறாகத் தமிழுக்குப் பெருமை வந்துவிடுமே என்றெண்ணியோ, அல்லது வேறு காரணத்தாலோ, இந்திய சரித்திராசிரியர் குமரிநாட்டைப்பற்றி இன்னும் ஆராயாமலும், பிறர் ஆராய்ந்து கூறியதை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கின் றனர். எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?

திராவிடம் தெற்கிற் சிறத்தல்

i. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்

(1) தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை.

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் கூறுகின்றது. [2]

சேரசோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளன.

“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று”

என்னுங் குறளுரையில், “பழங்குடி — தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்... தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று கூறினார் பரிமேலழகர்.


  1. 1.The Hindu, July 3,1938.
  2. 2.புறம் 2