பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிடம் தெற்கில் சிறத்தல்

௫௭

சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்னரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழசேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவினரென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது.

பாண்டியன் சோழன் சேரன் என்னும் பெயர்கள் வட சொற்களென்றும், பாண்டியன் பஞ்சவன் என்னும் பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்தவை யென்றும் மயங்கினர் கால்டுவெல். அப் பெயர்களின் பொருள்களாவன :

பாண்டியன்

வண்டி — பண்டி — பாண்டி — பாண்டியன்:

பாண்டி அல்லது பாண்டில் என்னும் பெயர் முதலாவது வட்டத்தையும் பின்பு வட்டமான வட்டு, கிண்ணம், தாமரைப்பூ, காளை முதலிய பொருள்களையுங் குறிக்கும். வட்டத்தின் பெயர் காளையைக் குறிப்பது உருட்சியானது என்னும் கருத்துப்பற்றி. இளவட்டம் (வாலிபன்), கனவட்டம் (பாண்டியன் குதிரை) என்னும் பெயர்களை இதனுடன் ஒப்புநோக்குக. பாண்டி என்பது காளையைக் குறித்து, பின்பு அக் காளைபோன்ற வயதனாகிய பாண்டியனைக் குறித்தது. விடலை, காளை என்னும் மாட்டுப் பெயர்கள் வயவரைக் குறித்தல் காண்க. காட்டுமாடு மறத்திற்குச் சிறந்தது; எதிரியைக் கொன்றாலொழிய வேறு வினை செய்வதில்லை. புலியும் கோளரியும் அங்ஙனமல்ல. நாட்டுமாடு காயடிப்பு, சூடுபோடல், வேலைப்பழக்கம், குறைந்தவுணவு முதலியவற்றாலேயே தன் மறத்தை யிழக்கின்றது.

'மடுத்தவா யெல்லாம் பகடன்னான்' என்று சொல்லத் தக்க குணம் அரசாட்சிக்கு இன்றியமையாததாதலுங் காண்க.

வட்டாடுதலுக்குப் பாண்டி விளையாட்டு என்னும் பெயர் பாண்டிநாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது. வட்டு (வட்டமான சில்) பாண்டி என்பன ஒரு பொருட்சொற்கள். பாண்டி என்னும் பெயரே இல் என்னும் குறுமையீறு(Diminutive suffix) பெற்றுப் பாண்டில் என்றாகி, கிண்ணம் தாளக்கருவி முதலிய சில பொருள்களை யுணர்த்தும். குறுமையீறு பெறாத