பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௪௭

ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம். இதை ஆறாயிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு நோக்குக.

தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து,

“மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101)”

என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். “தொண்டுபடு திவவின்”* என்றார் பெருங்கௌசிகனாரும்.

எண்ணுப்பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்டவேண்டியதாயிற்று.

எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர்
9
தொண்டு ஒன்பது (தொன்பது)
90
தொண்பது தொண்ணூறு
900
தொண்ணூறு தொள்ளாயிரம்
9000
தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம் (ஒன்பது + ஆயிரம்)

ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 x 9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும்.

ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனையெண்ணுப் பெயர்களெல்லாம் தனிமொழிகளாயிருக்க ஒன்பது என்பது மட்டும்


  • மலைபடுகடாம், 21