பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௮

ஒப்பியன் மொழிநூல்

தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயுமிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கி வருகின்றது.

ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, 'பொருந்தப் புகலல்' என்னும் உத்திபற்றியது. இக் கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையில மைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.

தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது - ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயு மிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கையாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும்.

தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார்.

கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார்.

(6) ‘ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட