பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௯௯

ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்’ (தொல். குற். 58)

இதன் வழுநிலை முன்னர்க் கூறப்பட்டது. இந் நூற்பாவில், "இயற்கைத் தென்ப" என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோரது என்பது புலனாகும்.

(7) “நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” (தொ.பு.30)

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பால மொழிவயின் இயற்கை யாகும்” (தொ.பு.31)

என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு,

“இனித் தொல்காப்பியரும், தமிழில் 'எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிகமாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமை யென்னும் பிரதமாவிபத்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமையாலும், 'எல்லா நீயிர் நீ' எ-ம், 'நீயிர் நீயென வரூஉங் கிளவி' எ-ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறி ருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலை மொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும் மென்னு நிலைமொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க” எனக் கூறியுள்ளார். (பிரயோக விவேகம், நூ. 7, உரை)