பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭௦

ஒப்பியன் மொழிநூல்

பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும்.

இலக்கணக் கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர்,

“. . . . . . . .. . . . . .விகாரப் பெயரே
பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முத
லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே
யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே”

என்று நூற்பாவியற்றி,

“தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந் திரிபில் பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழிகளையும் ஏற்று நிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங்காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க.

“இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாளமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக.

“இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாவால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக” என்று உரையும் கூறி,

இறுதியில், “இவ்வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று” என்று அதன் புன்மையையும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன்றுஞ் சில மாணவரிலக்கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினையாலணையும் பெயர்களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவனால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்டவேண்டிய விடத்து வருவனவேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்லவென்பதையும் அறியாமல், தமிழிலக்கணத்திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர்.