பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௭க

இனி,ஆயவன்,ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ் வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வேறாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும்;ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியி னின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்குமென்பதையும் அவர் நோக்கிற்றிலர்.

நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடியென்றும்.நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றாயிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்ப தையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தி யென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். தொல்காப்பியர் காலத்தில் வட மொழியில் இலக்கணநூலேயில்லை யென்பது பின்னர் விளக்கப்படும்.

நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென் னாட்டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறை யாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின.

நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு.

கா : பிறம் - புறம்
     பீளை - பூளை } நூ. வ.
     பிட்டு - புட்டு
     பீடை - பூடை } உ.வ (கொச்சை)

நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ் வேறு வடிவங்களினின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம்.

நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்த தாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன் றிற்று என்று கூறுவதையே ஒக்கும். ஒ.மொ-10