பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௮௦௫

யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்.....(15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்...(16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல்.(17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்....(18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும் பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின.(19) பயன் என்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல்.(20) மெய்ப்பாடு என்பது, சொற்கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல்.(21) எச்சவகை யென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்...(22) முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச்சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். (23) பொருள் என்பது, புலவன் தான் தோற்றிக் கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மை.(24) துறைவகை என்பது, முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒரு துறைப்படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்குளதாகச் செய்தல்.....(25) மாட்டு என்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (26)வண்ணம் என்பது, ஒரு பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம்.”[1]

இவற்றுள் கூற்று, கேட்போர், களன் முதலிய சில வுறுப்புகள் எல்லா மொழிகட்கும் பொதுவேனும், அவை செய்யுளுறுப்புகளிற் சேர்க்கப்பட்டதும், நோக்கு, திணை, துறை முதலிய பிறவுறுப்புகளும் தமிழுக்குச் சிறப்பாகும்.

மேற்கூறிய 26 உறுப்புகளையும் தொல்காப்பியத்திற் கண்டு கொள்க. இங்கு நோக்கு என்பதற்கு மட்டும் ஒரு காட்டுத் தருகின்றேன்.

“முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய விரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெரு கானங்


  1. 1.தொல் செ.1.பேராசிரியர் உரை.