பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௨௫

“அகத்தெழு வளியிசை.... நுவலாது,” “புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை....நுவன்றிசினே” என்று கூறுவதால், வாயினின்றும் வெளிப்பட்டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றாரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது.

வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய் (வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல்காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம்.

பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியருமிருந்தமையும் அவர் யோகு பயின்றமையும், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய அறிவன் தேயமும்,” “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்,” “அந்தணர்,” “நிறைமொழி மாந்தர்” என்று தொல்காப்பியர் கூறுவதாலறியலாம்.

யோகம் தமிழில் தபம் அல்லது தவம் எனப்படும். தபுத்தல் (பிறப்பைக்) கெடுத்தல். தபு + அம் = தபம் — தவம். ஒ.நோ : தபல்— தவல். திருவள்ளுவர் தவம் என்னுஞ் சொல்லை யோகம் என்னும் பொருளிலேயே வழங்கியிருக்கிறார். தொல்காப்பியரும் அதே பொருளில் அதன் மறுவடிவான தபம் என்பதை வழங்கியிருக்கிறார். தபம் செய்வார் தபத்தோர் அல்லது தாபதர் எனப்படுவர்.

தபத்தில், எண்ணம் இறைவன்மேலேயே யிருப்பதால், வினைக்குக் காரணமாக அவாவும், அதன் காரியமாகிய வினையும், அதன் பயனான பிறப்பும் தபுகின்றன. இதுவே தபம். துறவொழுக்கத்தின் முக்கிய நிலை தவமே. தவமில்லா விடின் துறத்தலரிது. இதனாலேயே, துறவறவியலில், தவத்தை முன்னும் துறவு அவாவறுத்தல்களைப் பின்னும் வைத்துக் கூறினார் திருவள்ளுவர். இல்லறத்தினின்றும் துறவறத்தை வேறுபடுத்திக் காட்டுவதும் தவநிலையே.

தபம் என்னுஞ் சொல் முதலாவது துறவுநிலை முழுவதையுங் குறித்துப் பின்பு அதில் முக்கியப் பகுதியான யோகுநிலையை மட்டுங் குறித்தது. துறவறத்தைப்பற்றிய பகுதி முழுமைக்கும் 'துறவறவியல்' என்று பெயரிட்டு, அதில் 'துறவு' என ஒரு தனியதிகாரமும் அமைத்திருக்கிறார் திருவள்ளுவர். இங்ஙனமே தவம் என்னும் பெயரும் என்க.