பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௭௦

ஒப்பியன் மொழிநூல்

யென்றும் இன்னிலையென்றும் இருவேறு கொள்கை நிலவு வதையும் நோக்குக.

சிறந்த நூல்களெல்லாம் அகத்தியர்க்கு முன்னமே தமிழில் இயற்றப்பட்டிருந்தன: பிற்காலத்தார் அவற்றை ஆராய்ந்தே வந்தனர் என்பதை,

"தலைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கடல் கொள் ளப்பட்ட மதுரையென்ப." 'இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப." கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் ........ சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று முக்கழக வரலாற்றிற் கூறிய தினின்றும் அறிந்து கொள்க.

அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை

அகத்தியர்க்கு முன் இந்திரன் என்ற ஓர் ஆரியர், தமிழிலக்கணம் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவ்விந்திரனுக்கு முன் ஆரியர் இலக்கணம் பெரும்பாலும் செய்திருக்க முடியாது.

"தலைச்சங்கமிருந்தார்.... நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப' என்று, தலைக்கழகமிருந்த காலம் 89 அரச தலைமுறையினதாகச் சொல்லப்படுதலால், அகத்தியர் அவ்வளவு காலமிருந்திருக்க முடியாதென்பது முழுத்தேற்றம். ஆகவே, தலைக்கழகத்தின் இறுதிக் காலத்தில், அல்லது அதன் பின் தான், அகத்தியர் தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியும். அவர் தென் மதுரை சென்ற சில ஆண்டுகளுக்குள், குமரி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டது. பின்பு அவர் ஓய்வு பெற்றுப் பொதியமலையில் தவமிருந்து தம் இறுதிக் காலத்தைக் கழித்தார், பாண்டியன் கபாடபுரத்தைக் கட்டி அங்கு இடைக் கழகத்தை நிறுவினான். அதில் தொல்காப்பியர் தலைமை தாங்கினார். அகத்தியர் அக்காலத்தில் இருத்தனரேனும், அக்கழகத்தில் உறுப்பினராயிருந்ததாக முக்கழக வரலாறு கூறுவது. அவர் அக்காலத்திலிருந்தமை பற்றியேயன்றி வேறன்று, தலைக்கழகத்தை அவர் அமைத்தார் என்ற வரலாறு பொருந்தாதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒவ்வொரு கழகமும் பல தலைமுறையாக