பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௭௮

ஒப்பியன் மொழிநூல்

விதை வகைக்கு, வித்து, விதை. மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்களுள,

இங்கனம், ஒவ்வோருறுப்பிற்கும் பற்பல சொற்களுள்ளன. அவற்றையெல்லாம் எனது செந்தமிழ்ச் சொல்லியலகராதியிற் கண்டு கொள்க.

நெல் வகை மட்டும் நூற்றுக்கணக்கா யுள்ளன. அவற்றுள் சம்பா என்னும் ஒருவகையே 70 திறமாயுள்ளது.

ஆங்கிலம் இக்காலத்தில் பல்வேறு மொழிகளினின்றும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், எக்கருத் தையும் தெரிவிக்கவல்ல மொழியாகப் புகழப்படுகின்றது. ஆனால், இவ்விருபதாம் நூற்றாண்டிலும், ஆங்கிலத்திலும் அதுபோன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி. மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலிருந்தது மிக மிக வியக்கத்தக்கதே.

தமிழில் ஒரு பொருட்சொற்கள் பல பொருள்கட்குள்ளன. பிற திராவிட மொழிகள், பல பொருள்கட்குத் தமிழ்ச் சொற்களையே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டிருக்கின்றன;

கா: இல் — இல்லு (தெலுங்கு). மனை — மன (கன்னடம்).

(2) தமிழ்த்தாய்மை :

திராவிடச் சொற்கட்கு மூலம் பெரும்பாலும் தமிழிலேயே உள்ளது.

கா : வென்ன (தொ) <வெண்ணெய் = வெள்+நெய். லேது (தெ.) < இலது.

செய் (கை) என்பது போன்ற இரண்டொரு சொற்கள், மூல வடிவில் தெலுங்கிலிருப்பது, பொதுவிதிக்குத் தவிர்ச்சியேயன்றி மாறாகாதென்க,

(3) தமிழ்த்தூய்மை :

தமிழைப் போலப் பிற திராவிட மொழிகளைப் பிற மொழிக்கலப்பின்றி யெழுத முடியாது.