பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௧௯௧

முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிட மொழி தென்னாட்டிற் செவ்வை யாயும் வடக்கே செல்லச்செல்லத் திரித்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும்.

3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

(1) நிலத்தின் தொனமை

ஞாலத்தில் குமரிநாடு மிகத்தொன்மையானது. இந்தியாவின் முதற்பெயர் நாவலந்தீவு என்பது. இது நாவலந் நண்பொழில் என்றும் வழங்கும். தமிழ்நாடு முழுவதும் ஒரே பொழில் (சோலை) போலிருத்தமையின், பொழில் என்பது நாடு அல்லது உலகம் என்று பொருள்பட்டது. இதனால் தமிழ் நாட்டின் மக்கட்பெருக்கற்ற ஒரு தொன்முதுநிலையுணரப்படும்.

சரித்திர காலத்திற்கு முற்பட்ட தாழிகளும் அடக்கக் கற்களும் ஏனங்களும், தென்னாட்டிற் பலவிடங்களிற் காணப்படுகின்றன.

“மிகப் பழைமையான மண்டையோடுகளுள் ஒன்று, ஜாவாவினின்று வந்துள்ளது. அத்தீவு தன்னருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒருகாலத்தில் ஆசிய நிலத்தோடிணைக்கப் பட்டிருந்தது. அது காட்டுமாந்தன் (Orang-utan) என்னும் குரங்கு வதியும் இடங்கட்கு அணித்தானது. மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் உயிரி வதிந்த இடமாகத் தெரிதலால், அது நமக்கு மிக முக்கியமானது”[1] என்று ஆல்ப்வ்ரெட் கிளாட் (Alfred Clodd) கூறுவதால், அதனோடு ஒரு காலத்தில் இணைக்கப்பட்டிருந்த குமரிநாட்டின் தொன்மையும் ஒரு வாறு விளங்கும்.

யானைக்கையும் மடங்கலுடம்பும் உள்ள யாளி என்னும் விலங்கும், அதுபோன்ற பிறவும் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்ததும் அதன் தொன்மையைப் புலப்படுத்தும்.

(2) நிலத்து மொழியின் தொன்மை :

இது பின்னர்க் கூறப்படும்.


  1. Child Hood of the world.