பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௦

ஒப்பியன் மொழிநூல்

விடு-வீ-(பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம்.

ஏழுலகம் :

பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களாயிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி எழுகோள்களினின்றும் ஏழுலகவுணர்ச்சி யுண்டானதாகவும் கொள்ளலாம்.

ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.

எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ. நோ. Indian Ocean (from Mount Atlas, in the north west of Africa) எழுகடல்களை நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக்கூறினர் ஆரியப்பழைமையர்.

எழுபிறப்பு :

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக ஆறும், தேவர் பிறப்பொன்றுமாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என, வேறொரு வகையா யெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும், பிராமணப்பிறப்பு ஒரு விரிவுளர்ச்சி (Evolution) யெனவும் கூறினர் ஆரியப் பார்ப்பனர்.

பிறப்பாலுயர்வு தாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை; தமிழர் கொள்கையன்று. பிரமாவே மக்களை நாற்குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்கனம் படைக்கவில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்தவரும் இஸ்லாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக்கொள்கை ஆரியராற் புகுத்தப் பட்ட தந்நலக்கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்று வேறொன்று மில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப்