பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௬௲

களைத் தழுவியது. ஆகையால் இச்சொல் திசைப்பெயருக் கேற்காமையறிக:

வடக்கு: வடம் + கு = வடக்கு.

வடம் - பெருங்கயிறு, வடம் போன்ற விழுதுகளை விடுவது வட(ஆல) மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது Ficus bengalensis என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது. நாவலந் (இந்து) தேயத்தின் வடபாகத்தில் வடமரம் மிகுதியாய் வளர்தலின், அத்திசை வடம் எனப்பட்டது;

தெற்கு : தென் + கு = தெற்கு.

நாவலத்தேயத்தின் தென்பாகத்தில் தென்னைமரம் இன்றும் சிறப்பாய் வளர்கின்றது. தென்னாட்டையும் கரு நீசியத் தீவுகளையும் நோக்குக.

தென்னைமரம் மிகுதியாய் வளரும் திசை தென்திசை யெனப்பட்டது.

கிழக்கு மேற்கு என்பவை, மொழிநூற் பெரும்புலவர் கால்டுவெல் ஐயர் நுணித்தாய்ந்து கண்டபடி, முறையே கீழ் மேல் என்னும் சொற்களடியாய்ப் பிறந்தவை.

வடம் தென் கீழ் மேல் என்று முதலில் வழங்கிய பெயர்கள், இன்று நான்காம் வேற்றுமை வடிவில் வழங்குகின்றன. இனி, அக்கு என்பது ஒரு பின்னொட்டு எனினும் ஓக்கும்.

உத்தரம் : உ+ தரம் = உத்தரம் = உயர் நிலை.

உசுரம் உயர்ச்சி குறித்தல் முன்னர்க் கூறப்பட்டது.

தக்கணம்: தக்கு+அணம் = தக்கணம். தக்கு = தாழ்வு,

தக்குத் தொண்டை, தக்கில் பாடுதல் என்னும் வழக்குகளை நோக்குக அணம் ஒரு பின்னொட்டு,

பனிமலை எழுந்த பின், வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. அதனால் அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. இவற்றை மேற்கு கிழக்கு என்னும் பெயர்களுடன் ஒப்புநோக்குக.