பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௯௬

ஒப்பியன் மொழி நூல்

நடக்க முதலிய சொற்களின் ஈற்றில் அகரம் ககர மெய்யோடு சேர்ந்து நிற்பதால், 'க' ஒரு வியங்கோளீ றாகக் கூறப்பட்டது. வியங்கோள் பாலீறும் எண்ணீறும் பெறாமையால் இருதிணை யைம் பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

செய்ய என்னும் வினையே, ஏவல், வியங்கோள், நிகழ்கால வினையெச்சம், தொழிற்பெயர் என்னும் நால்வகையில் வழங்கும். இவ்வியல்பு ஆங்கிலம் இந்தி முதலிய பிறமொழிகளிலும் உள்ளது.

செய்யியர் — செய்யிய —செய்ய (செய) என்பவை தொல் காப்பியத்தில் எதிர்கால வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. இவற்றுள், ' செய்ய' என்னும் வடிவுமே நிகழ்கால வினை யெச்சமாகவும் கூறப்படும். எதிர்கால வினையும் நிகழ்கால வினையென வழங்கினதை, 'மலை நிற்கும்', 'ஞாயிறியங்கும்' என, எதிர்கால வினைமுற்றுக்களையே முக்காலத்திற்கும் பொதுவான பொருளைக் குறிக்கும் நிகழ்கால வினைகளாக, உரையாசிரியர்கள் வழிவழி கூறினதினாலும், இன்றும் நீர் குளிரும் தீச்சுடும் என எதிர்கால வினைமுற்றுக்களே அப் பொருட்கேற்பதினாலும், அறிந்து கொள்ளலாம்.

எதிர்மறை வினை

ஏவல் :

ஒருமை—செய் + எல் = செய்யல—செய்யேல். அல் என்பது எதிர்மறைக் குறிப்பு வினை.

செய்யாய்+த் =(செய்யாய் தீ)—(செய்யாதீ)—செய்யாதி (செய்யா தீ)— செய்யாதே—செய்யாதை.

பன்மை—செய்யல்+மின் = செய்யன் மின்;

செய்யாதீ+ர் = செய்யாதீர்: +கள்.

+இர்= செய்யாதிர்: +கள்;

செய்யாதே+உம் = செய்யாதேயும். +கள் :

வியங்கோள் : செய்+அல்+க = செய்யற்க.

செயல் வினை : இஃது இருவகை,