பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

முன்னுரை

நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகஸ்தம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது.

(3) நூல் : ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜு ர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்), ஆறுசாஸ்திரம் (மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்யஸ்மிருதி முதலிய பதினெண் ஸ்மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட்டாகமங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு) வித்தை (நால்வேதமும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால் உபாங்கமும், ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும்.

தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப் பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக் கழக (சங்க) நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண் மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும்.

தொடர்நிலைச் செய்யுட்கள் (காவியங்கள்) தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை எனவும் வகுக்கப்பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல் (பிரபந்தம்)களாக விரிக்கப்படும். கடைக்கழகக் காலத்தை யடுத்தியற்றப்பட்ட பத்துத் தொடர்நிலைச் செய்யுட்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர்.

இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரளவில் வடமொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும்.