பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு

17

(4) நயன நீதி : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக்கொரு வகையாக நீதி கூறும்.

உ - ம் : “பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க.” (மனு. 8 : 276)

“பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாயமாய்)த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசியனைத் திட்டினால் 25 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 12 பணத்தையும் தண்டமாக விதிக்க.” (மனு. 8 : 268).

“இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க.” (மனு. 8 : 271)

“பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும்.” (மனு. 8 : 379, 80)

இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமை யானதாகச் சொல்லப்படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது.அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடையும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதி நூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறையிலக்கணையாகக் கொண்டாலன்றி, அந்நூலுக்கு எள்ளளவும் பொருந்தா.

தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே,

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”

என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும்.

ஒ.மொ—2