பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

முன்னுரை

கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம்முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.

(5) மதம்: தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றேயென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப்பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம்.

இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீராதித்தர் என நால்வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவுஸ், பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரியமான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. (அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு, ருத்திரன், சரஸ்வதி என்னுந் தெய்வங்கள் பின்னர் விளக்கப்படும்.)

இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம்.

(6) கருத்து : பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர் தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ளதென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்துகளாகும்.

தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரே யொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை.