பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௦௮

ஒப்பியன் மொழி நூல்

வழக்கு இதுபோது பார்ப்பனத்தொடர்பு மிக மிக வடசொல் மிகுந்தும், அது குறையக்குறைய வடசொற் குறைந்தும் உள்ளது.

பல்கலைக்கழக அகராதி முடியும்வரை, சொல்லாராய்ச்சியுள்ளவர் ஒருவராவது அதன் தொகுப்புக்குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், அத் தொகுப்புக்குழுவினர் பெரும்பாலும் மர ஊணினர். அதனால் ஊனுணவுபற்றிய பல சொற்கள் அவ் வகராதியிற் காணப்படவில்லை.அவர் உலக வழக்கையாராயாதது மட்டுமன்று, நூல் வழக்கையும் சரியாய் ஆராய்ந்திலர். முதலாவது பல அகராதிகளினின்றே சொற்களைத் தொகுத்ததாகத் தெரிகின்றது. ஏனென்றால், கருமுக மந்தி, செம்பின் ஏற்றை, கருங்களமர், வாய்ச்சியாடல் முதலிய பல சொற்கள் அகராதியிற் காணப்படவில்லை.

அகராதித்தொகுப்பு 27 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றது; 4,10,000 உருபாக்களும் செலவாகியிருக்கின்றன. ஆகையால், காலம் போதாதென்றொரு காரணங்கூறி, அகராதியின் குறையைமறைக்க முடியாது. ஆராய்ச்சியாளனாயின், இதுவரை சென்றுள்ள செலவில் 1/8 பங்கிற்கு, இதினும் சிறந்த அகராதி ஒருவனே தொகுத்திருக்கக்கூடும் என்று கூறுவது மிகையாகாது.

இப்போது அனுபந்தம் முதற்பாகம் என்றொரு பகுதி வெளிவந்துளது. அதிலும் சில சொற்களைக் காணோம்.பல்கலைக்கழக அகராதியின் குறைகள் பின்வருமாறு பல திறப்படும்.

(1) எல்லாச் சொற்களுமில்லாமை:
(3) உள்ள சொற்கட்கு எல்லாப்பொருளும் கூறப்படானம்
(3) காட்டக்கூடிய சொற்கட்கெல்லாம் வேர் காட்டப்படாமை.
(4) காட்டிய வேர்ச்சொல் தவறாயிருத்தல்,