பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

முன்னுரை

மிலேச்சனாய், கடுங்குளிரினின்றும் தன்னைக் காத்துக் கொள்ளக் காட்டு விலங்குகளின் தோலையுடுத்திக்கொண்டும், உலோகத்தைப் பயன்படுத்தத் தெரியாமலும் இருந்தான்” என்று, ஆட்டோ சிரேதர் (Otto Schrader) கூறுகின்றார்.[1]

ஆரியர் வருகை

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்பது பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும், பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவின பின், இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை 'ஹிந்து' என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை 'இந்தி' என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் 'இந்தியா' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்தார்கள். மாந்தன் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகர் என நான்கு நிலைகளைக் கொண்டது. தோலை உடுப்பதும், பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி கிழங்ககழ்ந்தவிடத்தில் தினைபோன்ற கூலம் விதைத்து மழை நீரால் (வானாவாரியாக) விளையச் செய்வதும்[2] குறிஞ்சி நாகரிகமாகும். ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்ப் பயிர்களை விளைப்பதும், ஆட்டு மயிராடை உடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும். நெல், கரும்பு முதலிய நன்செய்ப் பயிர்களை விளைப்பதும், நிலையாக ஓரிடத்திற் குடியிருப்பதும், பஞ்சாடையுடுப்பதும், தங் கள் பொருட்காப்பிற்குக் காவற்காரனை ஏற்படுத்துவதும் மருத நாகரிகமாகும். வாணிபமும், அரசியலும், கல்வியும் தோன்றி, முன்பு உழவரென்னும் ஒரே வகுப்பாராயிருந்தவர் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், பின்னர்க் கொல், நெசவு முதலிய மேல் தொழில்கட்கும், சலவை, மயிர்வினை முதலிய கீழ்த் தொழில் கட்கும் மக்கள் பிரிந்து போவதும், மாளிகைகள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சி உண்டாவதும் இசையும் நாடகமும் சிறப்பதும், வழிபாடுக-


  1. * “மிலேச்சர் ஆரியர்” என்ற திவாகரச் சூத்திரமும் இங்குக் கவனிக்கத்தக்கது.
  2. 1. புறம். 168