பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

முன்னுரை

ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, 'ஐ' என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு.

“ஐ வியப்பாகும்”

என்பது தொல்காப்பியம் ( உரியியல். 89),

ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும். ஒருவனுக்குப் பெரியோராயிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும்.

தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில்,sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம்.

ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண் பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப் பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னுமிவரையுங் குறிப்பதாகும்.

அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொதுவாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர்.

பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்-