பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்,ஐயர்,அந்தணர் என்னும் பெயர்கள்

33

டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது.

ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது “கீழிந்தியக் கும்பனி” (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற் கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகிவிட்டது.

ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகி விட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர் அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும்.

ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ் நாட்டிற் பிற்காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர் போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று.

'ஆரியற்காக வேகி' என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய

ஒ.மொ—3