பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

41

பார்ப்பனர் தமிழரை வென்ற வகை

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரேயாவர்: போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ்நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறு கூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப் பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.

தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ் நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ் நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது.

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

(1) அரசரையடுத்தல் :

பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப் படுத்தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கராயமர்ந்தனர்.

(2) தவத்தோற்றம் :

பார்ப்பனர் வைகறை யெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர்.