பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

முன்னுரை

யுரைத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைகளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுபவராவார்.

இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே

மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரிகத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ்டேவிட்ஸ் (Rhys Davids) என்பவர், தமது ’புத்த இந்தியா' (Buddhist India) என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காண முடியாமையைக் குறிப்பிடுகின்றார்.

இந்திய நாகரிகம், தமிழ் அல்லது திராவிட நாகரிகமேயென்று பின்னர் நூலில் விளக்கப்படுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன்.

பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக் கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு. அவர்களின் மறை நூலும் அற நூலுமே சான்றாகும். வட மொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும் பிரிந்துவந்த இந்திய ஆரியர், இங்கு வந்த பிறகே திராவிடரைப் பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை: முட்டையும், மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப் பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்டவிடத்தும், நோயுற்ற விடத்தும் பெரும்பாலும் ஊனுண்ணும் நிலையினரே. சைவ வேளாளரென்னுந் தமிழரோ, உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார், சைவ மதத்தில் ஊனுண்ணாமை ஓர் அறமாக விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயரும் கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும், சைவாள் என்றும்; சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர்