18
ஒய்யாரி
இரண்டாம் முறையாக அவன் அவள் வீடு தேடிச் சென்றபொழுது அவள் ரொம்ப உற்சாகமாக வரவேற்றாள். காபி, டிபன் எல்லாம் கொடுத்தாள். சிரித்தாள். கொஞ்சும் மொழி உதிர்த்தாள். குழைவாகப் பேசி அவன் உச்சி குளிரும்படி ‘குழையடித்து’' மயக்கினாள். ‘சரி, நோமாச்சு. போய் வாருங்க’ என்று வழிகாட்டி அனுப்பி வைத்தாள். அவன் வீதியிலே சில எட்டுகள் எடுத்து வைத்ததும், ஷோக்காக உடை யணிந்த ஒரு ஆசாமி செல்வதைக் கண்டான். ‘இவன் அவள் வீட்டுக்குத் தான் போகிறான்’ என்று சொன்னது மனம். அவனுக்குக் காரணமற்ற கோபம் எழுந்தது.
இரண்டு தினங்கள் கழித்து அவன் மறுபடியும் அவள் வீட்டுக்கு விஜயம் செய்தான். அவள் கலகலச் சிரிப்பு சிதறி வரவேற்றாள். ‘என் ராஜா எனக்கு ஒன்றும் வாங்கிவர வில்லையா?’ என்று கொஞ்சினாள் சிங்காரி.
கிரங்கிக் கிடந்த அவன் ‘என்ன வேணும்?’ என்று கேட்டான்.
‘என்ன வேணுமென்று நானா கேட்பது. உனக்குப் பிடித்ததை வாங்கி வாயேன்’ என்றாள். அவள் சுதந்திரத்தோடு பேசியது அன்பின் உரிமை—உரிமையின் நெருக்கம்—என்று தோன்றியது அவனுக்கு. இனி அவனும் தாராளமாகப் பேசி பழகலாம் அல்லவா!
‘ரோசாப்பூ வாங்கி வரட்டுமா மோகினி? உனக்கு மல்லிகைப் பூ தான் பிடிக்குமோ?’ என்று பிரியமாக விசாரித்தான்.
‘என்னத்துக்கு! வாசமுள்ள ரோசாப் பூவாய் நீ தானிருக்கியே என் ராசா!’ என்று சிரித்துக் கண்ணைச் சிமிட்டினாள் அவள்.
‘ஊங், பின்னே என்ன வேனும்? ஸோப்பு, ஸென்ட், சாக்லெட்... ...’