உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஒய்யாரி

பூவோ பழங்களோ, வேறு ஏதாயினும் வாங்கி வரும். வழக்கத்தைக் கைக்கொண்டான்.

ஒய்யாரியின் சாகசங்களை உணரும் தன்மையை இழந்து விட்டான் அவன். எல்லாம் அவளது அன்பின் பெருக்கே என்று கருதினான். நாட்கள் பல ஓடினும் அவள் அன்பு வெறும் பேச்சு, சிரிப்பு, கையின் மென் வருடுதல் முதலிய எல்லைகளுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்கிறதே என்ற வருத்தம் அவனுக்கு உண்டு. உணர்வு மீறி ஏதாவது சொல்லத் தொடங்கும் போது, அவன் கண்கள் ‘பாழாய்ப் போகிற’ கடியாரத்தின் மீது தாவும். ‘ஐயோடி! இவ்வளவு நேரமாச்சா? மணி போனதே தெரியலியே....சரி, போயிட்டு வாறியா ராசா?’ என்று குழைந்து, கன்னத்தை அன்பாகக் கிள்ளி வழியனுப்புவாள்.

அவன் உள்ளம் இன்ப வெளியிலே சுழன்று கொண்டிருக்கும். கற்பனை கட்டற்று சிறகு பரப்பி கனவுலகில் சஞ்சரிக்கும். மறுகணம் பல்டியடித்து விழுந்து, புழுதியிலே புரள நேரிடும். வாசலில் கேட்கும் கனைப்பும் காலடி ஓசையும், உள்ளே வரும் ஆசாமி பரப்பும் வாசனை அலைகளும், தெருவில் வந்து நிற்கிற பிளஷரின் பிரேக் சப்தமும்— எல்லாம் அவன் ஆனந்தத்தையும் அமைதியையும் குலைத்து எரிச்சல் உண்டாக்கும். யாராவது பெரிய ஆசாமிகளை வரவேற்கச் செல்லும் போது, அவள் துள்ளுகிற துள்ளலும், குதிக்கிற குதிப்பும்!

‘பச்சைத் தேவடியா தான் இவ! இவள் கெட்ட கேட்டுக்கு பெரிய பத்தினி மவ மாதிரி பாவலாப் பண்றா!’ என்று சீறுவான், வீட்டை விட்டு இறங்கிப் போகிற வாசுதேவன். அவள் முன் ஜாக்கிரதையோடு பெரிய மனிதர் வரும் முன்னரே அவனை அனுப்பி விடுவாள். ஆனால் வீதி முனையில் நின்று அந்த வீட்டில் நடைபெறும் நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுத்தான் போவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/22&oldid=1905765" இலிருந்து மீள்விக்கப்பட்டது