பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 |  வெள்ளியங்காட்டான் 

பட்ட சந்தர்ப்பங்களில் நீ அழகிய கண்கள் கலங்கி நின்று துயர் உறக்கூடாது என்பதற்காகவும்தான். அதுவும் என் மகளாகிய நீ - மற்ற நமது நாட்டு சகோதரிகளுக்கு அன்பிலும், ஆற்றலிலும், ஈகையிலும், தெளிவிலும் ஒரு ஆதர்சமாக விளங்கவேண்டும். பாமரமக்களின் பாமரத்தனமான வார்த்தைகளால் உள்ளமுடைந்து செய்யவேண்டிய கடமைகளை - செய்தே தீரவேண்டிய செயல்களைச் செய்யாமல் விட்டுவிடக்கூடாது என்று ஞாபகப்படுத்துவதற்காகவும் கூடத்தான் எழுதுகிறேன்.

மகாத்மா காந்தி சொன்னார், "செய் அல்லது செத்துமடி” என்று. தான் சொன்ன விதமே செய்தார். தமக்கு நல்லது என்று தோன்றிய - மக்களுக்கு நன்மை உண்டாகும் என்று தான் நம்பிய - மக்கள் செய்தே தீரவேண்டும் என்றுதான் எண்ணிய அவ்வளவும், ஆபத்துக்கு மத்தியில், தூற்றல்களுக்குத் துவளாமல் உறுதியோடும் நின்று செய்தே முடித்தார். ஒரு அறிவிலியால் அவருடைய புனித உடல் மறைந்தது. அந்த உடல் என்று இருந்தாலும் மறைய வேண்டியதே. ஆனால், அவர் என்றும் இந்த உலகில் இருக்கத்தான் போகிறார். அவருடைய குரல் இந்திய தேசம் உள்ளவரையும் மணிபோல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

அந்த மகாத்மாஜீயின் காலத்தவராகிய நாம் - அவருடைய கொள்கையைப் பின்பற்றுவோர் என்று சொல்லிக் கொள்ளக்கூடியவர்களாகிய நாம் ஆசாடபூதிகளாக - உண்மையைப் பின்பற்றாதவர்களாக வாழ்ந்தோமேயானால், அந்த வாழ்க்கைக்கு ஒப்பு எதைச் சொல்வது? காதகனாகிய கோட்சேயின் வாழ்க்கையைச் சொல்லலாம்; சொல்லினும் அது சரியான படி சொல்லியதாகாது.

(உடல் மேலே கதராடைகளை அணிந்து கொண்டு) உள்ளத்தைச் சுயநல அந்தகார யமனுக்கு அர்ப்பணம் செய்து விட்டவர்களைக் காட்டிலும் கோட்சே ஒரு காலத்தில் நல்லவ னாகக் கருத்தப்பட்டுவிடலாம்.