பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவை மீட்டு...

91



துடித்தாள். மயானத்தில் ஏதாவது பிணம் எரிந்தால்கூடத் தேவலை. அது தனிமையை அகற்றும் என்பதுபோல், அருகே இருந்த அந்தப் பிண பூமியைப் பார்த்தாள். மாண்டு முடிந்தோரின் மரணக்கதையைப் பறைசாற்றும் பணக்காரச் சமாதிகளும், தொட்டால் விழுந்து விடுவதுபோல் இருந்த கல்லைக் கிரீடமாக வைத்துக் கொண்டிருந்த ஏழைச் சமாதிகளும், ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல், பயங்கரமான மௌனத்தை வெளியிட்டுக் கொண்டு இருந்தன.

'எங்கே போவது? காம்பவுண்டில் தூங்கலாமென்றால் ரைட்டர் ரைட்டாய்' நடக்க மாட்டான் போல் தோணுது. டீக்கடைப் பக்கம் போனால், அவளையும் பலசரக்கில் ஒரு 'சரக்காக'க் கருதலாம். உலகத்தை எட்டும் உலகம்மை இரண்டு வயதுச் சிறுமியாகி 'அம்மா அம்மா' என்று அரற்றினாள். தாயின் மடியில் தலை வைத்துப் படுக்க விரும்பியவள் போல், போலீஸ் காம்பவுண்ட் சுவரில், தலையைத் தேய்த்துத் தேய்த்து அழுதாள். அழுகை திடீரென்று சினமாகியது. ஓட்டமும் நடையுமாக ஊருக்குப்போய், தூங்கிக்கொண்டிருக்கும் மாரிமுத்துவையோ, ராமசாமியையோ, இடுப்பில் செருகியிருக்கும் சின்னக் கத்தியால் கீறலாமா என்று நினைத்தாள். இடுப்புக் கத்தியை நினைத்ததும், அதன் அருகில் செருகியிருந்த லோகன் கொடுத்த காகிதம் நினைவுக்கு வந்தது. அந்தக் காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டபோது "இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ஸ்டேஷன்ல ரயில பிடிக்கலாம்" என்று அவன் சொன்ன இறுதி வார்த்தைகள், அப்போதுதான் பேசியதுபோல், அவள் காதில் ஒலித்தன. "ரயில்வே டேஷனில் இந்நேரம் ரயில் ஏறியிருப்பாரோ?"

"ரயில்வே டேஷன், ரயில்வே டேஷன்."

'ஆமாம். கோனச்சத்திரத்துலயும் ஒரு ரயில்வேடேஷன் இருக்கிறதே அங்கே போய் ஏன் ஆட்களோடு ஆளாகப் படுத்திருக்கக் கூடாது? கடவுளா பாத்துதான் அவர் அனுப்பி இந்த மாதிரி பேசவச்சிருக்கான்!

லோகனை நினைத்தவுடனேயே, தன் இரவுப் பிரச்சினைக்கு வழி கிடைத்திருப்பதை நினைத்து. அவள் அந்த நிலையிலும் மகிழ்ந்து போனாள். அவன் நினைவே. இப்படி ஒரு நல்லதைச் செய்தால், அவன் எப்படிப்பட்டவனாய் . இருக்க வேண்டும்! எவளுக்குக் குடுத்து வச்சிருக்கோ? இந்நேரம் யாராவது ஒருத்தி எதிரில் உட்கார்ந்து. அவரை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருப்பாள்!

உலகம்மை சிந்தித்துக்கொண்டே நிற்கவில்லை. ஆட்களை அடைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அவர்களை