பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஒரு கோட்டுக்கு வெளியே ...


மாதிரி வச்சுக்கிட்டிருக்கான்னு சொல்லப்போய் அவள் நிஜமாகவே அருணாசலத்தை ‘வச்சிக்கிட்டு’ இருக்குத் துவங்கினால், கேவலம் உலகம்மைக்கு மட்டுந்தானா? அவளைச் சேர்ந்த ஜாதிக்கும் பங்கு கிடைக்காமலா போகும்? “மேல் ஜாதிக்காரங்க எங்களுக்கு மச்சினங்கன்னு சேரிப்பசங்க பேசினா சேதம் யாருக்கு”

ஆகையால், குட்டாம்பட்டியர், “பாம்பும் சாகனும், பாம்படிக்கிற கம்பும் நோகக்கூடாது” என்று நினைத்தவர்கள் போல், உலகம்மையை எதிர்த்து, பகிஷ்காரத்தைப் பலப்படுத்தினார்கள். சிலரை அதற்காகப் பலவந்தப்படுத்தினார்கள். உலகம்மை வட எல்லையான தோட்டத்துக் கிணற்றில் குளித்து வந்தாள். அங்கே அவள் குளிக்கக் கூடாது என்று தோட்டக்காரரைச் சொல்ல வைத்தார்கள். விரைவில், தோட்டச்சுவரை முள்வைத்து அடைக்க வேண்டும் என்றும், அவரிடம் ஆணையிடப்பட்டது. உலகம்மை சட்டாம்பட்டிக் கிணறுகளில் ஒன்றில் குளித்தாள். இரண்டுநாள் கழித்து, தோட்டக்காரர். அவள் அருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உலகம்மை அசரவில்லை. சேரிக்கினற்றில் போய்த் தண்ணீர் எடுத்தாள். ஊர்க்கிணற்றுக்குத் தண்ணீருக்காகப் போவதை, அங்கேயுள்ள பெண்களின் நிசப்தத்தைத் தாங்க மாட்டாது ஏற்கனவே விட்டுவிட்டாள்.

என்றாலும், ஊரில் நிலவிய பதட்ட நிலையைக் கருதி, ஹரிஜனப் பெண்கள் அவள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சேரியில் உள்ள சில கிழங்கள்கூட “எல்லாம் ஒங்களாலத்தான் நாடாரம்மா. நீங்கதான் ஊரோட ஒத்துப்போவாம தனிக்காட்டு ராணிமாதிரி நடக்கிய. எங்களை எதுக்கும்மா ஒங்க சண்டையில இழுக்கிய?” என்று தண்ணீர் எடுக்கப்போன அவளிடம், நேரிடையாகவே கேட்டு விட்டார்கள். உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. அவர்களைப் பற்றி அருணாசலத்திடமோ, இதர பெண்களிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை. அப்படிச் சொன்னால், அந்தக் கிழங்கட்டைகளுக்கு, ‘செமத்தியாக’ வசவு கிடைக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

உலகம்மை, சட்டாம்பட்டி வயக்காட்டுக்குப் போகும்போது, வீடடில் இருந்த ஒரே ஒரு செப்புக்குடத்தையும் கையோடு கொண்டு போனாள். இதையறிந்த குட்டாம்பட்டியார், சட்டாம்பட்டி நிலப்பிரபுக்களிடம், உலகம்மையை வயலில் சேர்க்கக்கூடாது என்று பக்குவமாகச் சொல்வதற்குத் தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள்.