பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதுங்கி வாழ்ந்து...

157



உலகம்மைக்கு மீண்டும் பயங்கரத் தனிமை வாட்டியது. மெட்ராஸுக்குப் போகலாம் என்று அய்யாவிடம் சொன்னபோது, அவர் மறுத்துவிட்டார். அவளும் சேரிமக்கள் காட்டும் அன்பில், கட்டுண்டவளாய் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். இப்போது ஊர் நிலைமை காரணமாக, சேரி மக்கள் ஒதுங்கி இருப்பதால், தனிமைப்பட்ட அவள், அய்யாவிடம் மீண்டும் பட்டனப்பிரவேசத்தைப் பற்றிச் சொல்லும்போது, அவரோ, “எந்தவித பலமும் இல்லாமல், அழக மட்டும் வச்சிக்கிட்டு இருக்கிற ஏழப்பொண்ணு மெட்ராஸ்ல மானத்தோட வாழ முடியாது” என்று சொன்னார். அவள் மீண்டும் வற்புறுத்தியபோது, “நான் செத்த பிறவு என்னைக் குழிமுழிவிட்டு அப்புறமா வேணுமுன்னா போ! என் கண்ணால நீ மெட்ராஸ்ல மானத்துக்குப் போராடுறத பாக்க முடியாது” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு. வேறுபக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார். உலகம்மையால் அதற்குமேல் வற்புறுத்த முடியவில்லை. அதோடு ஒரு லெட்டர்கூடப் போடாத லோகு இருக்கும் மெட்ராஸுக்குப் போக, அவளுக்கு விருப்பமில்லை. அவனை நினைக்காமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை வலிய தன்னைமீறி வரவழைத்துக்கொண்டு, அதை இறுதியில் வீம்பாக மேற்கொண்டாள்.

இத்தனை அமளிக்குள்ளும், சரோஜா ― தங்கப்பழம் கல்யாணம், வாணவேடிக்கைகளோடும், கொட்டு மேளத்தோடும் நடந்தேறியது. கல்யாணமாகி பத்து நாட்களுக்குப் பிறகும், சரோஜா கண்ணைக் கசக்குவதைப் பார்த்து மாரிமுத்து நாடார் திடுக்கிட்டார். போகப்போகச் சரியாகிவிடும் என்று நினைத்தவர். மகள் களையிழந்து இருப்பதைப் பார்த்துக் கலங்கினார். முதலிரவிலேயே, தங்கப்பழம், ‘பட்டை’ போட்டுக்கொண்டு, அவளை நெருங்கினான் என்றும் சாராய நாற்றத்தைத் தாங்க முடியாத சரோஜா, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அழுதாள் என்றும், தங்கப்பழமும் வெளியே வந்து, அவள் தலைமுடியைப் பலவந்தமாகப் பிடித்து, இழுத்துக்கொண்டு உள்ளே போனான் என்றும், மனைவி மூலம் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடாருக்கு, மார்பை என்னவோ செய்தது. இது போதாதென்று. மச்சினன் பலவேசம் “அத்தான். அடுத்த போகத்துல கரையடி வயலுல கடல போடப்படாது. தக்காளிதான் போடணும்” என்று, அவர் நிலத்துக்காரர் மாதிரியும். இவர் குத்தகைக்காரர் மாதிரியும் பேசி வருவது, அவரை வாட்டி வதைத்தது.

“இத்தனைக்கும் காரணமான அந்த உலகம்மை, இன்னும் உலாத்துறாள். காலை நீட்டி நீட்டி நடக்கிறாள். கையை ஆட்டி ஆட்டிப்