பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்மை நடந்தாள்...

199


உடைக்க முடியாமல் போய்விடுமே என்பதற்காக, அவர்கள் உலகம்மையிடம் பல்லைக் காட்டினார்கள். அவள், அதை உடைக்காமல் உடைப்பதைப் பார்த்து. முகத்தை சுழித்தபோது, பலவேச நாடார் வாயைச் சுழித்தார்:

“ஆசாரியாரே அவ வேணுமுன்னா அருணாசலத்தோட தொடர்ப விடாண்டாம். தென்காசி கிங்காசில ரூம்கீம் எடுத்துக்கிட்டு எப்டி வேணுமுன்னாலும் வாரத்துல ஒரு நாளக்கி தெரியாமத் தொலையட்டும்! அதுக்காவ, நம்மள மனுஷங்களா நெனக்காம சேரில நிரந்தரமா இருந்து கொஞ்ச வேண்டாமுன்னு சொல்லுமய்யா!”

உலகம்மை பலவேசத்தை ஏறிட்டுப்பார்த்தாள். உதடுகள், கோபத்தால் துடித்தன.

“பலவேசம் ஒன் வாயி அழுவாமப் போவாது. அருணாசலம் என்னைக் கூடப்பிறந்த தங்கச்சியா நினைக்கான் நீரு ஒம்ம சித்திமவள நினைச்சீராமே அது மாதுரியில்ல.”

பலவேசம், துடித்துக்கொண்டும், பல்லைக் கடித்துக் கொண்டும், அவளைத் திட்டுவதற்காக வாயைத் திறக்கு முன்னால், இரண்டுபேர் அவர் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டு, “ஒம்மாலத்தான்வே வினயே வந்தது. ஏன்வே நாக்குல நரம்பில்லாம பேசுறீரு?” என்று அதட்டினார்கள்.

உலகம்மை, அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொள்பவள் போல் வேகமாக நடந்தாள். சற்றுத் தள்ளி நின்ற பெண்கள் கூட்டம் அவளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பின்பு தன்னையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டது. தொலைவில் போய்த் திரும்பிப் பார்த்தாள் உலகம்மை. பிறகு பொதுப்படையாகச் சொன்னாள்.