பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"நீ எப்டி சரோசாகூட போவலாம்?"

"போறதும் போவாததும் என் இஷ்டம்."

"ஒரு குடும்பத்த கெடுக்கறது நியாயமா?"

"நீரு என்ன சொல்றீரு"

"என் மவன் தங்கப்பழத்துக்கு அவள கட்டிடலாமுன்னு இருக்கையில நீ அவாகூட எப்டிப் போவலாம்?"

"இது என்னடா அநியாயம்? பொண்ணுகூட தொணைக்குப் போன்னு சொன்னாரு. தட்ட முடியல. போனேன், உமக்கென்ன வந்தது?"

"சும்மா ஜாலம் போடாத. ஒன்னப் பொண்ணுன்னு காட்டி, சரோசாவ மாப்பிள்ள தலையில் கட்டப் போறாங்க. மாப்பிள்ள நீன்னு நெனச்சி சம்மதிச்சிருக்கான்."

உலகம்மை திடுக்கிட்டுப் போனாள். அவளைக் கைராசிக்காரி என்று சொல்லி, சரோஜாவை அழைத்துப் போகச் சொன்னார்கள். அவளை, மாப்பிள்ளைப் பையன் பெண்ணென்று தப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மோசடி நடந்திருப்பது, அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏழைகள் அழகாய் இருப்பதுகூட, ஆபத்தோ என்று ஆயாசப்பட்டாள். ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு கோபமாகி, அழுகையாகி, அவள் மௌனமாக நின்றாள். அந்த மௌனத்தைத் தான் சாட்டிய குற்றங்களுக்கு ஆதாரமாகக் கருதிய பலவேசம், எகிறினார். அவள், நடந்ததைச் சொல்ல விரும்பாத அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தார்.

"ஏமுழா பேசமாட்டக்க? ஒருமணி நேரம் பட்டுச்சேல கட்டணுங்கற ஆசையில, ஒருவேள சோறு சாப்பிடணுமுங்ற எண்ணத்துல, பொண்ணுமாதிரி பாசாங்குப் பண்ணிட்ட. இதவிட வேற தொழிலு நடத்தலாம்."

"யோவ்! மானங்கெட்டதனமா பேசி மரியாதய கெடுத்துக்கிடாத. நான் அப்படித்தான் நடிச்சேன். நீ இப்ப என்ன பண்ணனுங்ற?"

"நீ யாருகிட்ட பேசுறங்றது ஞாபவம் இருக்கட்டும்."

"நீ மொதல்ல வெளியே போறியா, கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா? என்னப் பாத்து தொழிலா நடத்தச் சொல்ற. ஒன் பொண்டாட்டிய வச்சி