பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஒரு கோட்டுக்கு வெளியே ...


அப்படிப்பட்டவள். வேலைக்காரிகளின் எதிர்ப்பைக் கண்டதும், கொஞ்சம் திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும், அவர்கள், வயலுக்குள் விழுந்தடித்துப் போவார்கள் என்று நினைத்து, அப்படி எதுவும் நடக்காததால், அதிர்ந்து போனாள். பெருங்காய வாசனையை கைவிடாமல் அதட்டினாள்.

“அவன அடிக்கப் போறியள, அடிக்க முடியுமா உங்களால?”

ஆவேசமாகப் பதில் வந்தது:

“அவனயும் அடிப்போம். அத தடுக்கிறவளையும் அடிப்போம். ஏழ எளியவங்கன்னா கேவலமா?”

“உலகம்ம எங்களுக்குத் துரோகம் பண்ணிட்டா. அவள வயலுக்குள்ள விடுறதும் விடாததும் எங்க இஷ்டம். நீங்க யாரு அப்பனை?”

“ஒருத்தி பாதி நேரம் வேல பாத்தப்பிறவு அவள மாத்த அதிகாரம் இல்ல. அதுவும் தேவடியான்னு சொல்லுறதுக்கு திறந்து கிடக்கல.”

“அவா என் வயலுல மிதிக்க முடியாது.”

“அப்படின்னா நாங்களும் வேல பாக்கல. அவளுக்கு இல்லாத வயலு எங்களுக்கும் வேண்டாம். வாங்கழா போவலாம். இந்த வயலுல யார் வந்து நடுறான்னு பாத்துப்புடலாம். ஓஹோ.”

முப்பது நாழிகையில், இருபத்தெட்டை வீட்டுக்குள்ளே செலவழித்த பேச்சியம்மைக்கு உண்மை புரியத் துவங்கியது. ‘காலம் மாறிப் போச்சி. அதுவும் கெட்டதுக்கு மாறிப் போச்சி. அட்டய பிடிச்சிக் கட்டுலுல கிடத்துற மாதிரி. நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சதுமாதிரி தெருவில சுத்துற வேலக்கார நாயுவளும் சட்டம் பேசுற காலம் வந்துட்டு. விட்டுப் பிடிச்சாதான் வாழலாம்.’

இப்போதுதான் பேச்சியம்மை, அந்தப் பெண்களை முதன் முறையாக மனுஷிகளாகப் பார்த்தாள். இப்போதுதான். அவளுக்கு அவர்களும், சேலை ஏன் கட்டுகிறார்கள் என்பதற்கு முழு அர்த்தம் புரிந்தது. இதனால் கொஞ்சம் பயந்து கூடப் போனாள். அதே நேரத்தில், எப்படியாவது உலகம்மையை ‘டிஸ்மிஸ்’ செய்து விடுவதில் அவளுக்கு மட்டும் வயலை லாக்கவுட் செய்வதில் குறியாக இருந்தாள். அதற்காகச் சுருதியை மாற்றினாள்.“இத்தனை பேசுறியள! அவன் எதுக்காவ அவள அப்படிப் பேசியிருப்பான்னு நெனச்சிப் பாத்திகளா?”