பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஒரு கோட்டுக்கு வெளியே ...



எப்போவாவது "ஏ உலகம்மா, கடன எப்ப குடுக்கப் போற?" என்பார். அவளும், "ரெண்டு மாசத்துல அடைக்கேன் மாமா" என்பாள். அத்தோடு சரி.

ஆனால் விஷயம் இப்போது அப்படி இல்லை. உலகம்மை செய்த காரியம், ஊரிலேயே கொஞ்சம் ரசனை கலந்த கோபத்தை உண்டாக்கி இருந்தது . என்றால், மாரிமுத்து நாடாருக்கு ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மாயாண்டி நாடார், வாங்கிய கடனுக்காக வைக்கப்பட்டிருக்கிறார் என்று ஒவ்வொருவரும் வெளிப்படையாகப் பேசினாலும், அதன் உட்காரணம் எல்லோருக்கும் புரியும். ஆகையால் எவரும் சிபாரிசுக்குப் போகவில்லை . அப்படிப் போனால் 'நம்மையும் கல்யாணத்த உடச்சதுல சம்பந்தப்பட்டதா நினைப்பாவு' என்று பலர் நினைத்துக் கொண்டார்கள். சிபாரிசு செய்யத் துடித்த சிலரோ, மாரிமுத்து நாடாரிடம் கடன்பட்டவர்கள். அவர்களைச் சுற்றி தாங்களாகக் கோடுகள் போட்டுக்கொள்ளவோ, 'இந்தா கிழி' என்று மாரிமுத்து நாடாரிடம் சொல்லாமல் சொல்லவோ அவர்கள் விரும்பவில்லை .

உலகம்மை. கோட்டுக்குள் தவிக்கும் அய்யாவைப் பார்த்தாள். காளியம்மன் மாதிரி கோர சொரூபமாகி, மாரிமுத்து நாடார் வீட்டை நொறுக்கி, பீடி ஏஜெண்ட்டின் வயிற்றைக் கிழித்து, உள்ளே இருக்கும் குடலை எடுத்துத் தோள் மாலையாகப் போட்டுக்கொண்டு, வெள்ளைச் சாமியின் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவது போல் பாவித்துக் கொண்டாள். ஒரே ஒரு கணந்தான். மறுகணம், கற்பனைச் சிறகு ஒடிய, பிரத்யட்ச நிலையை உணர்ந்தவள் போல், கோட்டுக்குள் காலடி வைத்தாள்.

அவருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்த வீர மறவர்களில் ஒருவனான ராமசாமி, அந்தப் 'பொம்பிளையை' மிரட்டினான். அவன் அவ்வப்போது அரசியல்வாதியாகிறவன்.

"கோட்டுக்குள்ள நுழைந்த, ஒன் கூட்டுக்குள்ள இருந்து உயிரு போயிடும்."

வெள்ளைச்சாமி வெண்டையாகவே பேசினான்:

"தேவடியா செறுக்கி, போழா பாக்கலாம்."

உலகம்மை சிறிது தயங்கினாள். பிறகு வருவது வரட்டும் என்று நினைத்தவள் போல் கோட்டுக்குள் போனாள். வெள்ளைச்சாமி,