பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஒரு சத்தியத்தின் அழுகை


"போலீஸ்ல சொல்றதுக்கு. நாம என்ன பொட்டப் பசங்களா?... ராமசாமி. நீயும் நானும் கம்ப எடுத்துக்கிட்டுச் சப்பரத்துக்கு முன்னால போவோம். தடுக்க வார பயலுவள அங்கேயே காவு கொடுக்கலாம்...' என்றார் மாயாண்டி நாடார்.

சட்டாம்பட்டி பெரிய கிராமம். மேல் ஜாதிக்காரர்கள் பகுதி பகுதியாகப் பரந்திருக்க, “காலனி“ மட்டும் ஊருக்குச் சற்றுத் தொலைவில், கழற்றிப் போடப்பட்ட காலணி போல் ஒதுங்கி இருந்தது. ஆசாரிப் பகுதியில் சுடலை மாடனும், நாடார் பகுதிக்குச் சங்கிலிக் கருப்பனும், தேவர்க்கு மயானபுத்திரனும், பிள்ளை, பண்டாரங்களுக்கு பிள்ளையாரும்' குலதேவதைகள். ஒவ்வொரு ஜாதியினரும், தத்தம் குலதெய்வத்திற்கு உற்சவம் நடத்துவதுண்டு. இவை போதாதென்று ஊருக்குப் பொதுவாக, கலகநாடி அம்மனும், முருகனும் பொதுக் கோவில்கள். கலகநாடி அம்மன் விழா, ஆடி மாதத்திலே ஐம்பெரும் விழாவாக நடக்கும். முதல்நாள் பிள்ளைகளும், பூக்கட்டி பண்டாரங்களும் சைவ பூஜை நடத்தி, ஒர் உபன்யாசத்தை ஏற்பாடு செய்வார்கள். அடுத்த நாள், தேவர்களின் வில்லுப்பாட்டு. அதற்கடுத்த நாள் நாடார்களின் 'கணியான், பிறகு ஆசாரிகள், விழா எடுப்பார்கள். இறுதி நாளில், சப்பரத்தில் கலகநாடி அம்மன் பவனி வர, மேற் கூறிய ஒவ்வொரு கோவில் முன்னாலும், சப்பரம் நிற்க, சம்பந்தப்பட்ட சாமி கோவிலில், கற்பூர ஆராதனை செய்யப்படும். கலகநாடி அம்மனின் அருள்வந்து ஆடும் சாமியாடி, ஒவ்வொரு கோவில் முன்னாலும் ஒடிப்போய் ஆடுவார். ஆடி போய், ஐப்பசியில் முருகனுக்கு சைவ பூஜை நடக்கும். இதில் எல்லா ஜாதி இந்துக்களும் வரி கொடுத்து விழா எடுப்பார்கள். இது, பரம்பரை பரம்பரையாக நடக்கும் பழக்கம்.

இந்தப் பரம்பரைப் பழக்கத்தை, பரம்பரை பரம்பரையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 'காலனி” ஆட்கள், மாற்ற நினைத்தார்கள். தாங்களும், கோவிலில் ஒருநாள் விழா எடுக்க வேண்டும் என்று சாடைமாடையாகக் கேட்டு, பின்னர் நேரடியாகவே கேட்டார்கள். இதற்கு முதலில் ஆதரவு கொடுத்த உள்ளூர் அரசியல்வாதிகள், பின்னர் மெஜாரிட்டி வோட்டில்லாத அவர்களைக் கைவிட்டதோடு ஜாதி இந்துக்களோடு சேர்ந்து கொண்டார்கள். இதற்கிடையே தங்களுக்குக் கோவில் பாத்தியதை இல்லையானால் சப்பரத்தை மறிக்கலாம் என்று, ஹரிஜன வாலிபன் கந்தசாமி சகாக்களிடம் சொல்லிப் பார்த்த வார்த்தை, அங்கேயுள்ள ஒரு ஹரிஜன கண்டிராக்டர் மூலம் கிராமத்தின் ஜாதி இந்துத் தலைவர்களுக்கு எட்டியது. வரிந்து கட்டி, வருவதை எதிர்ப்பதற்காக இவர்கள் ராமசாமித் தேவர், மாயாண்டி நாடார் போன்றவர்களை முன்னணியில் தள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.

கோவில் விழா துவங்கியது. இவர்கள் எதிர்பார்த்தது போல் எந்த “காலனி“ வாசியும் கலாட்டாவுக்கு வரவில்லை. அதோடு, வழக்கமாகத் தொலைவில் நின்று விழாவை ரசிக்கும் “சைலன்ட் மெஜாரிட்டி“ ஹரிஜனங்களும் வரவில்லை.