பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, குழுவில் முதலில் நிற்கும் ஓட்டக்காரர் ஓடி, முதல் வட்டத்தில் உள்ள மூன்று கரளாகட்டைகளையும் எடுத்துக் கொண்டு இரண்டாம் வட்டத்திற்கு ஓடி, அதில் மூன்று கட்டை களையும் நிறுத்தி வைத்துவிட்டு, தன் குழுவை நோக்கி ஓடி வந்து, தனக்கு அடுத்து நிற்கும் இரண்டாம் ஆட்டக்காரரைத் தொட்டுவிட்டு, கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஆட்டக்காரர் ஓடி, இரண்டாவது வட்டத்தில் இருக்கும் கரளாகட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து, முதல் வட்டத்தில் நிறுத்தி வைத்து விட்டு, தனக்குப் பின்னால் இருக்கும் மூன்றாவது ஆட்டக்காரரைத் தொட்டுவிட்டு, கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் வட்டத்திலுள்ள கரளாகட்டைகளை மாற்றி மாற்றி வைக்க வேண்டும்.

கீழே விழுந்துவிட்டால், விழச் செய்த ஆட்டக்காரர் தான் எடுத்து நிறுத்தி வைக்க வேண்டும்.

முதலில் வந்து முடிக்கின்ற ஆட்டக்காரரின் குழுவே வெற்றி பெற்றதாகும்.

62. ஒற்றைக்கால் தொடரோட்டம்

(Hopping Relay)

ஆட்ட அமைப்பு: முன் ஆட்டம் போல, குழுக்களைப் பிரித்து, ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நான்கு குழுக்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு முன்னால் 50 அடிதுரத்தில் ஒரு எல்லைக் கோட்டினைப் போட்டு வைத்திருக்க வேண்டும்.