பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 203


கைப்பக்கம் நீங்கள் இருக்க வேண்டுமென்று வெறுஞ் சுதந்திரமும் வெறும் உற்சாகமும் கொடுத்துத் தங்கள் காரியங்கள் யாவும் கைகூடியவுடன் நீங்கள் பழைய பறையர்களேயென்று பாழ்படுத்தி வருவது அனுபவமேயாகும் (அலாய்சியஸ் I 204).

பிராமணர் அல்லாதாரின் சங்கங்களையும் “டிப்பிரெஸ்டு கிளாஸை” உயர்த்துவோம் என்பாரையும் நம்பி, சாதிபேதமற்ற திராவிடர்கள் ஏமாந்துவிடக் கூடாதென்று பல கட்டுரைகளில் தாசர் கூறும் அறிவுரை பின்னைய நிகழ்வுகளை வைத்து எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

கடவுள் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவாரைச் சாடுவதற்கு அவர்களைக் கள்ளுக்கடை வைத்திருப்பவரோடு ஒப்பிட்டுக் காட்டுவார் தாசர்.

கள்ளுக்கடை விற்போன் தன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளை வாங்கி விற்று அதன் லாபத்தால் சீவிக்கின்றான். கரிதோசை விற்பவளோ தன் கைப்பொருள் கொண்டு சரக்குகளை வாங்கிக் கரிதோசை செய்து அவற்றை விற்று அதனால் சீவிக்கிறாள். . . . .

குடிப்பவர் ஒழிந்தால் விற்பவர்கள் இரார் என்பது திண்ணம் ஓர் வஸ்துவை வாங்குவோர் இல்லாவிடத்து விற்போர் இரார் என்பது கருத்து.

ஆனால் கடவுட்கடை வைத்திருப்பவர்களோ அவர்கள் சாமி சரக்கைத் தாங்களே காணாதிருப்பினும் பஞ்ச சாதகங்களில் ஒன்றாகிய பொய்யைச் சொல்லி எங்கள் தேவனே தேவன், மோட்சத்திற்கு நேரில் கொண்டு போய் விட்டுவிடுவார், சாமியை நேருக்கு நேரில் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்; ஆயினும் எங்கள் உண்டிப் பெட்டிக்குப் போடும் பணங்களை மட்டிலும் தடை செய்யாதீர்கள் . . .

இதற்கு சாமியென்னும் முதலே கடைச்சரக்குகளாய் இருக்கின்றபடியால் கள்ளுக்கடைக்குக் கைம்முதல் வேண்டியிருப்பது போல் கடவுள் கடைகளுக்குக் கைம்முதல் வேண்டுவதில்லை. இன்னும் கடையை விருத்தி செய்ய வேண்டுமாயின் சொத்துள்ள கைம்பெண்கள் எங்கு இருக்கின்றார்களென்று அறிந்து அவர்களை அணுகி அம்மாதர்களை . . . . தங்கள் மதக்கடைக் கணக்கில் சேர்த்துக் கொண்டு சாமி வியாபாரத்தைச் சம்பிரமமாகச் செய்து வருவார்கள். தங்களுடைய சொத்துக்களை மறந்தும் மதக்கடை பெயரால் எழுதுவார்களே ஒருக்காலும் எழுத மாட்டார்கள் (அலாய்சியஸ் I 210).

தாங்கள் கேளாததும் காணாததுமான ஒன்றைச் சொல்லிப் பொருள் பறிக்கும் பாதகம் கடவுட்கடையென்பதால் அதனை நடத்துவார்கள் விற்பாரினும் கொடியவர் என்று தாசர் எழுதிச் செல்வார்.