பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


கொடுத்தல், வேள்விகளை நடப்பித்தல், கற்றல், புலனின்பப் பொருள்களுக்கு அடிமையாகாதிருத்தல் ஆகியவை அரசர்களுக்கும் கால்நடைகளைக் காத்தல், கொடுத்தல், வேள்விகளை நடப்பித்தல், கற்றல், வாணிபம் செய்தல், பணம் கடன் கொடுத்தல், உழுதொழில் ஆகியவை வைசியர்க்கும் ஏனைய மூன்று வகுப்பார்க்கும் வெறுப்பின்றி அடிமையாய்ப் பணிசெய்தல் மட்டும் சூத்திரர்க்கும் ஏற்படுத்தப் பட்டவையாகும்” (1.87-91) என்று மனுநூல் விவரிக்கும். அது பல பொருள்களைப் பற்றியதாயினும் எங்கும் அடிக்கோடிட்டுக் காட்டுவது பிராமண வருணத்தாரின் உயர்வையே.

பிராமணன் பிறக்கும்போதே சமயம் எனும் புதையலைக் காப்பதற்காக வாழும் உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக உலகின் உச்சியில் பிறக்கிறான். இந்த அண்டத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களும் அவனுக்கே சொந்தம்; அவனுடைய பெருமை காரணமாகவும் உயர்ந்த பிறப்பு காரணமாகவும் இதற்கான தகுதி அவனுக்கு உண்டு. பிராமணன் தனக்குச் சொந்தமானதையே சாப்பிடுகிறான்; தனக்குச் சொந்தமானதையே அணிகிறான்; தனக்குச் சொந்தமானதையே கொடுக்கிறான். மற்றவர்கள் பிராமணனின் கருணையினாலேயே சாப்பிடுகிறார்கள் . . .

கற்றறிந்த பிராமணனே மனுவின் உபதேசத்தைக் கவனமாகப் படித்து அவனுடைய மாணவர்களுக்கு ஒழுங்காகக் கற்பிக்க வேண்டும். இதை வேறு யாரும் செய்யக் கூடாது (1.99-101)

பிராமணன் ஆர்யாவர்த்தத்திலுள்ள நாடுகளிலேயே வாழ முயல வேண்டும்; சூத்திரன் உணவுக்கு வழியில்லையானால் எந்த நாட்டிலும் வாழலாம் (2.24)

பெயர் வைப்பதில்கூட வேறுபட்ட விதிகள் கடைப்பிடிக்கப் பெற வேண்டும். பிராமணனுடைய பெயர் நற்குறியுடைய சொல்லையும் சத்திரியனுடைய பெயர் ஆற்றலைச் சுட்டும் சொல்லையும் வைசியனுடைய பெயர் செல்வத்தைக் காட்டும் சொல்லையும் பெற்றிருக்க வேண்டும். சூத்திரனுடைய பெயரே அருவருப்பை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். (2.31).

அரசனை விடவும் பிராமணன் உயர்ந்தவன், மரியாதைக்குரியவன் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்து வயதான பிராமணனும் நூறு வயதான அரசனும் தந்தையும் மகனுமாகக் கருதப் பெற வேண்டும். இவருள் பத்து வயதான பிராமணனே தந்தை (2.135)

ஒருவன் மணந்து கொள்ளும் பெண் அவனுடைய வருணத்தைச் சார்ந்தவளாக இருக்க வேண்டுமாயினும் பிராமணன் இரண்டாவது