பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


நால் வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு.

என்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர் யாவராயினும் அவர்கள் எவ்வளவு கீழோராயினும் நலிந்தோராயினும் பாவம் செய்தவராயினும் அவர்கள் பெண்களாகவோ, வைசியர்களாகவோ, சூத்திரர்களாகவோ இருந்தாலும் கூட, உயர்ந்த நிலை அடைவார்கள். அப்படியானால் என்னை விரும்பும் தூய்மையான பிராமணர்களைப் பற்றியும் அரசகுலத்து முனிவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டுமா? (9. 32-33)

எல்லாப் பெண்களும் கீழ்வருணங்களோடு சேர்க்கப்பட்டிருப்பது கருதற்குரியது.

பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில் நால்வருணங்களும் பிறவிக் குணத்தை அடிப்படையாகக் கொண்டவையென்றும் அவை ஒவ்வொன்றும் தத்தம் தொழிலைச் செய்தலே முறையென்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோருடைய தொழில்கள் அவர்களுடைய பிறவிக் குணங்களுக்கேற்ப வேறுபடும். மனத்தைக் கட்டுக்குள் வைத்தல், தவம், தூய்மை, பெருந்தன்மை, நேர்மை, ஞானம், இறை நம்பிக்கை ஆகியவை பிராமணனுக்குரியவை. வீரம், ஒளி, உறுதி, திறமை, போர்க்களத்தில் அஞ்சாமை, ஈகை, நல்ல தலைமை ஆகியவை சத்திரியனுக்குரியவை. வணிகம், உழவு, பசுக்களை வளர்த்தல் ஆகியவை வைசியர்களுக்குரியவை. பணி செய்வது சூத்திரனுக்குரியது ... பிறர்க்குரிய தருமத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தருமத்தைக் குறைபடச் செய்தாலும் ஒருவன் பாவம் செய்தவன் ஆகான் (18. 41-47).

பகவத் கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை எல்லாவுயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதித்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் சமுதாய அமைப்பு எந்த விதத்திலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று; அதனை அறமென்று சொல்லுவதைச் சான்றோர் ஏற்க மாட்டார்; அத்தகைய அமைப்புடைய சமுதாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் இரக்கமும் அறச்சினமும் கொள்வர் என்பது திண்ணம். பகவத் கீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டுணர்வுக்கு முற்றும் மாறானது; வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது.