பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 என்ன- கல்லூரிக்கு சோகமா!

ஆம்! கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டப்பட்டுள்ள அதற்கு, உயிரும் உடலும் இல்லைதான்; ஆனாலும், உயிரும் உடலுமாகப் பழகிய-கலைக்கோயிலாகத் தன்னை மதித்துப் போற்றிய எத்தனை பேரை அது பார்த்திருக்கிறது! தன் நிழலில் படித்து வளர்ந்து, முன்னேறி ஆளான எத்தனை எத்தனை உயர்ந்த மாணவமணிகளை அது தன்னுடைய நீண்ட கால வாழ்க்கையில் சந்தித்திருக்கிறது. அதற்காக அதுவும் தான் எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது! ஆனால் இப்போது-

அக்கல்லூரியின் கரிய விழிகளின் கடையிலே முத்துமுத்தாகக் கண்ணீர் பூத்து நிற்கிறது. ஆம்! தன்னிடம் அன்போடும், ஆவலோடும் வந்து நாடி வந்த காரியத்தை மறவாமல், கருமமே கண்ணாகப் படித்து முன்னேறும் மாணவர்களுக்கு மத்தியில், தன் பெயருக்கும் இழுக்கைச் சூட்டி, தங்களுக்கும் இழுக்கைத் தேடிக் கொள்ளும் சில மாணவர்களைத் தன்னுள் சந்திக்க நேர்ந்ததில்தான் அக்கல்லூரிக்கு அத்தனை சோகமும் கண்ணீரும். பொறுப்பற்று தங்களுடைய எதிர்காலத்தை இந்த மாணவர்கள் வீணாக்கிக் கொள்கிறார்களே, பணம் செலவு செய்து படிக்க வைத்திருக்கும் தங்கள் பெற்றோரின் எண்ணற்ற ஆசைக்கனவுகளை அறியாமல் அலட்சியம் செய்து கொண்டு இப்படிவீணான காரியங்களில் பிரவேசித்துத் தங்களின் பொன்னான காலத்தையும் பெயரையும் வீணாக்கிக் கொள்கிறார்களே; இவர்கள் மனம் திருந்தி, நல்லமாணவர்களாக மாட்டார்களா? நாளை உயர்ந்த குடிமகனாகப் பிரகாசிக்க வேண்டியவர்கள் அல்லவா இந்த இளம் உள்ளங்கள்!'-என்பதே இந்தக் கல்லூரியின் கவலை எல்லாம்.

அதன் கவலைக்குக் காரணமான மாணவ மணிகளைச் சந்திக்கலாமா?