உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சு.சமுத்திரம்

வணக்கம் போட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றுகிறோம்...உயிர் பிழைக்க நினைத்தால் ஓடிப் போங்கடா என்று சூளுரைத்திருக்கிறார்கள். எய்ட்ஸ் நோய், ரத்தத்தினால் பரவியதுபோல் அல்லாமல் இந்த தவழும் நோய் வம்சாவழி நோயாக இருப்பதனால் உலகம் முழுவதும் இது வேகமாகப் பரவாமல் இருந்தது. அப்பா, பிள்ளை, பேரன் என்றே இந்தநோய் தாக்கத் தொடங்கியது. முக்கியமாக மூதாதையர் பணக்காரர் களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ள குடும்பத்தில்தான் இந்த நோய் முக்கியமாக ஆண் வாரிசுகளை அதிகமாகத் தாக்கியது. இதனால் உலகம், ஒதுங்கிக் கொண்டு பாராமுகமானது. ஆனால், அப்படியும் நீண்ட நாள் இருக்க முடியவில்லை. காரணம், இந்த நோய் முதலில் பெங்களூர், பம்பாய், டெல்லி ஆகிய நகரங்களில் வாழும் பணக்காரத் தமிழர்களைத் தவழ வைத்ததுடன், இவர்களோடு தமிழர்களை மணந்துகொண்ட கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர் என்று ஒரு சிலரையும் குனிய வைத்துவிட்டது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.நா. அமைப்புகளில் 'டெபுடேஷனில் சென்ற தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தவழத் துவங்கி விட்டார்கள். அமெரிக்கத் தமிழர்களும் ஆங்காங்கே அப்படியே... அமெரிக்கத்தமிழரை மணந்த அமெரிக்கப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையும் இப்படித் தவழ்வதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தது அமெரிக்கா தான் ! உலக நாடுகள் சுதாரித்தன. பல நாடுகளில் தமிழர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகள் அங்கு வாழும் என்.ஆர்.ஐ. தமிழர்களை இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பப் போவதாக அறிவித்தன. இந்தியா இதைக் கடுமையாக ஆட்சேபித்து, ஐ.நா. சபைக்கு விண்ணப்பித்தது. அதன் பாதுகாப்பு சபை, அவசர அவசரமாய்க் கூடியது. உலக